மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெஹ்ரானில் அமைந்துள்ள ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்’ மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையினால் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் இனி ‘சட்டபூர்வமான இலக்குகளாக’ கருதப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்டனத்தை இன்று திங்கட்கிழமை ஈரான் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் என ஈரான் தரப்பில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க முடியாது எனவும் அந்த எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. மார்ச் 30ஆம் திகதி கெடு முடிவடைய உள்ளதால், மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


















