அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு பிபா வின் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
நோபல் அமைதிப் பரிசுக்காக பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் டொனால்டு ட்ரம்பை பரிந்துரை செய்தன. சுமார் 10 போர்களை நிறுத்தியதாக சொல்லிய ட்ரம்ப் வெளிப்படையாக அமைதிக்கான நோபல் பரிசுக்காக பிரச்சாரம் செய்தார்.
ஆனால் இறுதியில் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. அவர் பரிசைப் பெற்ற சிறிது நேரத்திலேயே, எங்கள் நோக்கத்திற்கான தீர்க்கமான ஆதரவுக்காக ட்ரம்ப்புக்கு இப்பரிசை அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
இந்தச் சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட பிபா அமைதிப் பரிசு ட்ரம்ப்புக்கு நேற்று வழங்கப்பட்டது. ட்ரம்ப்பும், ஃபிபா தலைவர் கியானி இன்பான்டினோவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். காசாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்காக ட்ரம்ப், நோபல் அமைதிப் பரிசை வென்றிருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாக இன்பான்டினோ முன்ன தாக தெரிவித்திருந்தார். ட்ரம்ப்புக்கு இந்த பரிசை வழங்கிய இன்பான்டினோ, ‘நீங்கள் அணியக்கூடிய உங்களுக்கான அழகான பதக்கம்’ என்று கூறினார்.
இதனையடுத்து, ட்ரம்ப் உடனடியாக அந்தப் பதக்கத்தை தனது கழுத்தில் அணிந்தார். ‘உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது’ என அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலகை உயர்த்திப் பிடிக்கும் கைகளை சித்தரிக்கும் தங்கக் கோப்பையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய இன்பான்டினோ, ‘இதுதான் ஒரு தலைவரிடமிருந்து, மக்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு தலைவரிடமிருந்து நாங்கள் விரும்புகிறோம். இது உங்கள் பரிசு, இது உங்கள் அமைதிப் பரிசு’ என்று கூறினார்.
இந்த நிகழ்வில், தனது மனைவி மெலனியா ட்ரம்ப் உட்பட தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப், ‘இது உண்மையிலேயே என் வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாகும்’ என்று கூறினார்.
அமைதிக்கான அசாதாரண நடவடிக்கைகளை எடுத்து, அதன் மூலம் உலகம் முழுவதும் மக்களை ஒன்றிணைத்த தனிநபர்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒன்றாக ஃபிபா இந்தப் பரிசு பற்றி குறிப்பிட்டுள்ளது.

















