மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) ஆரம்பமான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியபோது ரிஷாப் பான்ட் உபாதைக்குள்ளானதால் தற்காலிக ஓய்வு பெற்றார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா முதலாம் நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மந்த கதியில் ஓட்டங்கள் பெறப்பட்ட முதலாம் நாளன்று எந்த அணியினாலும் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவிக்க இந்தியா ஓரளவு சிறப்பான நிலையை அடைந்தது.
எனினும் ரிஷாப் பான்ட் கடும் காயத்திற்குள்ளானதால் அவரை இந்தியா முழுப் போட்டியிலும் இழக்க நேரிடுமோ என அஞ்சப்படுகிறது.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரிஷாப் பான்ட் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கிறிஸ் வோக்ஸின் வேகப்பந்தை ரிவர் ஸ்வீப் முறையில் அடிக்க முயற்சித்தபோது பந்து அவரது துடுப்பை உராய்தவாறு அவரது வலது பாதத்தைப் பதம்பார்த்தது.
இதனை அடுத்து கடும் வேதனையினால் அவதியுற்ற ரிஷாப் பான்ட்டுக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது பாதத்தில் பந்த பட்ட இடத்தில் கோல்வ் பந்தைப் போன்று வீக்கம் ஏற்பட்டதுடன் இரத்தமும் கசிந்ததைக் காணமுடிந்தது.
அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரால் வலது காலை ஊன்ற முடியாமல் போனதுடன் அவர் கடும் அவதிக்குள்ளானார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ ஊர்தியில் ரிஷாப் பான்டை உதவியாளர்கள் ஏற்றிச் சென்றார்கள்.
இப் போட்டியில் இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக இருந்தது. யஷஸ்வி ஜய்ஸ்வால் 58 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 46 ஓட்ங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் ஷுப்மான் கில் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். (140 – 3 விக்.) இந் நிலையில் சாய் சுதர்சனும் ரிஷாப் பான்ட்டும் ஜோடி சேர்ந்த 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரிஷாப் பான்ட் ஊபாதைக்குள்ளாகி ஓய்வறைக்கு திரும்பினார்.
மொத்த எண்ணிக்கை 235 ஓட்டங்களாக இருந்தபோது சாய் சுதர்சன் 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இரண்டாவது டெஸ்ட போட்டியில் விளையாடும் சாய் சுதர்சன் குவித்த முதலாவது டெஸ்ட் அரைச் சதம் இதுவாகும்.
ஆட்டநேர முடிவில் ரவிந்த்ர ஜடேஜாவும் இராக்காப்பாளன் ஷர்துல் தாகூரும் தலா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.


















