தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான கதையின் நாயகியாக நடித்து லாபகரமான நடிகை என்ற நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் நடிகை ஷிவதா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கயிலன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்கியராஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தில் ஷிவதா, ரம்பா பாண்டியன், பிரஜின், மறைந்த நடிகர் மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா – ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி கே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. டி. அரசகுமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ் – கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன் மற்றும் தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ” எம்மை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால்.. தவறு செய்யாதவன். நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்சனிஸ்ட் என்றும் சொல்லலாம்.
இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம். ” என்றார்.
















