காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஹமாஸின் அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
‘ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். இஸ்ரேல் உடனடியாக காசா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வெளியேற்ற முடியும். இப்போது குண்டுவீசுவது மிகவும் ஆபத்தானது’ என்று டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், இன்று ஒரு பெரிய நாள் என்று குறிப்பிட்டதுடன், எல்லாம் எப்படி முடியும் என்று பார்ப்போம் என்றார்.
காஸாவில் போர் முடிவுக்கு வருவது மிக நெருக்கமாக உள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தீர்க்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்தியகிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் அமைதி நிலவ இந்த ஒப்பந்தத்தில் உதவியதற்காக கட்டார், துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் திட்டத்தில் உள்ள பணயக்கைதிகள் பரிமாற்றப் பகுதியை நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, ஏனைய விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்த பின்னர் டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















