ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் கடற்படைத் தளபதி அலிரேசா, இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்தார்.
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இராணுவம் மூடியிருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்கிரி, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். சர்வதேச கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்திய குற்றத்துக்காக அவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டுகளை வீசின.
இதில், அலிரேசா டாங்கிரி உயிரிழந்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை முடக்கியதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், அவரது உயிரிழப்பை ஈரான் இராணுவம் நேற்றுவரை உறுதிசெய்யவில்லை.


















