-முழு அளவிலான பதிலடி கொடுப்போம் என்கிறது ஈரான்-
ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசாங்கம் மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு எதிராக நாடு தழுவிய தொடர் போராட்டங்கள் இடம்பெறும்; நிலையில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது கடற்படையை நகர்த்தியுள்ளது.
மத்திய கிழக்கு கடற்பரப்பிற்குள் அமெரிக்க கடற்படை நகர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும், அது எவ்வளவு வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம். அமெரிக்கா எங்களை தாக்கினால், அதற்குப் பதிலாக அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சி தனது வசம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் என்றும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மிகக் கடுமையான வழிகளில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்கானதல்ல என்று ஈரான் நம்புவதாகக் கூறிய அந்த அதிகாரி, இருப்பினும் மோசமான சூழ்நிலைக்கும் ஈரான் இராணுவம் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, ஈரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், தாக்குதலுக்கான பொத்தானில் ஈரான் விரல் வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் முழுமையான போராக மாறக்கூடும் என்ற அச்சத்தை உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது.


















