‘டி என் ஏ வெற்றி பெற்றதன் மூலம் இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்” என நடிகர் அதர்வா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கடந்த இருபதாம் திகதியன்று வெளியான ‘டி என் ஏ’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று வருகிறது.
இதனால் உற்சாகம் அடைந்த படக் குழுவினர் படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இதில் படத்தின் இணை கதாசிரியரும் , எழுத்தாளருமான அதிஷா பேசுகையில், ” இந்த படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம்.. மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஏதேனும் ஒரு உதவியை செய்யும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருந்தோம். மனிதநேயத்தை உரக்க பேசிய இந்த திரைப்படம்.. மக்களால் கொண்டாடப்படுவதால்… இதற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா பேசுகையில், ” இயக்குநர் நெல்சன் எம்மை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அதனுடன் ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு படமாக டி என் ஏ அமையும்’ என உத்தரவாதமும் வழங்கினார். அவருடைய வாக்குறுதியை அவர் நிறைவேற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் நல்ல படமாக மட்டும் இல்லாமல் .. வணிக ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது . அதனால் உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இந்த தருணத்தில் என்னை நான் உணர்கிறேன்” என்றார்.