ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது அரசியல் கட்சியொன்றின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான கும்பல் புதன்கிழமை (02) இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் நேற்றிரவு அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் மேலும் இருவரும் மப்றூக் மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
“என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே, மப்றூக் மீது தாக்குதல் நடத்தியதாக, பொலிஸ் முறைப்பாட்டில் ஊடகவியலாளர் மப்றூக் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து விட்டுச் சென்றதாகவும் ஊடகவியலாளர் மப்றூக் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம், நாம் ஊடகர் பேரவை போன்ற ஊடக அமைப்புகளும் தனியார் ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் குறித்த ஊடகவியலாளரை தாக்கிய சந்தேக நபர்களை சட்டத்தின் முன்நிறுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை வெளியிட்டுள்ளார்.