-அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா-
-சீனாவுடன் இணைந்து, விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த புதுத் திட்டம்-
விண்வெளி ஆய்வில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா, 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து நிலவில் நிறுவவுள்ள கூட்டு ஆய்வு மையத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், அண்மைய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா உள்ளது.
ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தைரஷ்யா ஒகஸ்ட் 2023 இல் ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஷ்யாவின் அரச விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், 2036 ஆம் ஆண்டுக்குள் சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்தது.
இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















