-ரஷிய ஜனாதிபதி புதின் சபதம்-
-பிசுபிசுக்கும் போர் நிறுத்த பேச்சு-
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய ஜனாதிபதி புதின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தியா வருவதற்கு முன்னர் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் கூறியதாவது:-
டான்பாஸ் மற்றும் நோவோரோசியா பகுதிகளை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து ரஷியா நிச்சயம் ‘மீட்கும்’. அது இராணுவரீதியாலான வழியிலும் இருக்கலாம், அல்லது வேறு வழிகளிலும் இருக்கலாம்.
அதாவது, எங்கள் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளில் இருந்து உக்ரைன் படையினரை வெளியேற்றுவது மூலமாகவும் இது நடக்கலாம்; உக்ரைன் படையினர் தாங்களாகவே அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுவதன் மூலமாகவும் நடக்கலாம் என்றார் புதின்.
நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷியா 2022 ஆம் ஆண்டு படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைத்துக் கொண்டதாக புதின் 2022 ஆம் ஆண்டு அறிவித்தாலும், அவை முழுமையாக ரஷிய கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றையும் கைப்பற்ற ரஷியாவும், அந்தப் பகுதிகளைப் பாதுகாத்து, இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டுவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பேச்சுக்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், எந்த வழியிலும் டான்பாஸைக் கைப்பற்றியே தீருவோம் என்று தற்போது கூறியுள்ளதன் மூலம், அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின்போது இந்த விவகாரத்தில் ரஷிய தரப்பு துளியும் விட்டுத்தராது என்பதை புதின் உணர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

















