கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை கூறினார். மத்திய அரசு தடுப்பூசிக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் ஏராளமானோர் இருந்தது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, திடீர் மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை புறக்கணிக்க முடியாது என்று கூறினார். திடீர் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணங்களை கண்டறிய மருத்துவர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு, 19 மாநிலங்களில், 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டோர் திடீரென்று உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய நோய் தடுப்பு அமைப்பு இணைந்து, ஆய்வு மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவானதாக கூறப்பட்டுள்ளது.