இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்குடன், சர்வதேச புலம்பெயர்வு நிறுவனம் (IOM) இலங்கை கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்திற்கு 50 டேப்லெட் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை, IOM இன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் இஓரி கடோ (Iori Kato) அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோளித கமல் ஜினதாசவிடம் (Dr. B. K. Kolitha Kamal Jinadasa) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இவ்விழாவின் போது, பேருவளை கடற்றொழில் துறைமுகத்தையும் பின்னர் கடற்றொழில் கண்காணிப்பு மையத்தையும் (Fisheries Monitoring Center – FMC) பார்வையிட்ட IOM பணிப்பாளர், கடல்சார் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பணியாளர்களிடமிருந்து நேரடி விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.
மேலும், IOM மற்றும் DFAR (Department of Fisheries and Aquatic Resources) இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிலையான மற்றும் விரிவான கூட்டாண்மைக்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் போது, நடைமுறையில் உள்ள கப்பல் கண்காணிப்பு முறைமை (VMS) குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
இந்நிகழ்வில், கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். ஜே. கஹவத்த (S. J. Kahawatta) மற்றும் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய எல்லைப் படைப் பிரதிநிதி ஒருவரும் பங்கேற்றனர்.