கண்டி நகரில் தற்காலிகமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களிலும், கழிவறை கட்டணங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனப் பல பொதுமக்கள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இந்த கட்டணங்கள், கண்டி நகருக்கு வருகை தரும் பயணிகளை சுரண்டும் நடவடிக்கையாக மாறக்கூடாது எனவும் அவை கருத்து தெரிவித்துள்ளன.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சமூகத் தொழிற்பாட்டாளர் மற்றும் பல பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினருமான சட்டத்தரணி பாலித பண்டார இது பற்றித் தெரிவித்ததாவது,
“முன்னதாக, கண்டி நகரில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தில், முதல் 10 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அதன்பின், முதல் மணி நேரத்துக்கு ரூபா.50 மட்டுமே அறவிடப்பட்டது. ஆனால் தற்போது அந்த சேவை தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கட்டணம் ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த காலத்திற்கு வாகனத்தை நிறுத்துவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. பாண் போன்ற சிறிய பொருட்கள் வாங்குவதற்கே கூட வாகனம் நிறுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.”
மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் தற்போது முழுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. முன்பிருந்த இலவச கழிவறைகள் தற்போது ரூபா.30 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கின்றன. இதனால், ஒருவர் மாதம் சராசரியாக ரூபா.1800 – ரூபா.3000 வரை செலவழிக்க நேரிடுகிறது.
“இந்த வசூல்களில் மிகச் சிறிய தொகைதான் மாநகர சபைக்கு செல்கிறது; பெரும்பகுதி இடைத்தரகர்களின் கைக்கு செல்கிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் இத்தகைய கழிவறை வரிகள் இருந்ததில்லை” எனவும் அவர் விமர்சித்தார்.
இந்நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தச் சம்பந்தமாக மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.