இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ‘காசா பற்றி எரிகிறது’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரியவந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை முதல் காசா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ‘பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், ஹமாஸைத் தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்’ என்று தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதால் காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்பாகவே காசா நகரை முழுமையாகக் கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களைத் தனது தற்காப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அளவில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளன.

















