ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் அரசு பாலஸ்தீன சிறைக் கைதிகளையும் விடுவித்ததன் மூலம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தப் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், ஹமாஸ் படையினர் ஆயுதங்களைக் கைவிடுவது, காஸாவின் ஆட்சி யார் வசம் இருக்கும், பாலஸ்தீன அரசு உருவாக்கம் போன்ற கடினமான சிக்கல்கள் தொடர்கின்றன.
இதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்டு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸால் முன்னெடுத்துச் செல்லப்படும் காஸா போர் நிறுத்தத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முக்கிய பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, தற்போதைய ஆரம்ப கட்டங்களே முன்னோக்கி நகர்வதில் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, ஹமாஸிடம் உயிருடன் எஞ்சியிருந்த 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது இஸ்ரேலியர்களுக்கு தற்போது மகிழ்ச்சியை அளித்தாலும், உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களைத் திரும்பக் கொண்டுவருவது அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.


















