-நைஜீரியா குவாரா மாகாணத்தில் நடந்த கொடூரச் சம்பவம்-
-தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை-
மேற்கு நைஜீரியாவில் உள்ள இரு கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் 162 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் குவாரா மாகாணத்தில் அமைந்துள்ள வோரோ, நுகு ஆகிய இரு கிராமங்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை மாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள், கிராமங்களுக்குள் புகுந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் நோக்கி சரமாரியாகச் சுட்டனர்.
தாக்குதல் குறித்து அப்பகுதியின் எம்.பி முகமது உமர் பயோ கூறுகையில்:- ‘ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘லகுரவா’ ஆயுதக் குழுவினரே இத்தாக்குதலை நடத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த கிராமங்களில் இருந்து 162 உடல்கள் மீட்கப்பட்டன.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என்றார்.
நைஜீரியாவில் அண்மைக்காலமாக நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழலில், இது மிகவும் மோசமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தாக்குதல் நடந்த கிராமங்களுக்குக் கூடுதல் இராணுவப் படைகள் விரைந்துள்ளன. தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

















