எமக்குப் பலன்களை அளிக்கும் கிரகங்களில் முதன்மையானவர் சனி பகவான். நீங்கள் கடந்த பிறவியிலும், இந்தப் பிறவியிலும் செய்த மற்றும் செய்து வரும் செயல்களுக்கான சுப தன்மையை சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து அதற்குரிய சுப பலன்களை வழங்குவதிலும், கெடுபலன்களை வழங்குவதிலும், இவரை மிஞ்ச ஆள் இல்லை. இவருடைய நேர்மை – நீதியின் காரணமாக எம்மில் பலரும் சனி பகவான் என்றால் அச்சமடைகிறார்கள். அதிலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி என ஏதேனும் சனியின் தாக்கம் இருந்தால் மனதளவில் சோர்ந்து விடுகிறார்கள்.
இந்நிலையில் சனி பகவானின் தாக்கம் அதிகரித்து உங்களுக்கு சோம்பல் தன்மை ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
சனியின் தாக்கம் அதிகம் இருக்கிறது என சோதிட நிபுணர்கள் எச்சரித்து விட்டால் அன்றிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மௌன விரதத்தை கடைப்பிடித்து, அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகத்திற்கு எள் எண்ணெயை தீபமாக ஏற்றி வழிபட வேண்டும்.
ஆலயத்திற்கு செல்லும் தருணத்திலோ அல்லது அங்கிருந்து திரும்பும் தருணத்திலோ அல்லது சனிக்கிழமை முழுவதும் உங்களுடைய கண்களில் தென்படும் வீதியோர தூய்மைப் பணியாளர்களுக்கு உங்களாலான பொருள் உதவியை தானமாக செய்தால், சனியின் தாக்கம் குறைந்துவிடும். நீங்கள் மீண்டும் சுறுசுறுப்பை பெறுவீர்கள். மனதளவில் ஊக்கம் கொள்வீர்கள். அதுவே மக்களை வசீகரித்து உங்களை உயர்த்தும்.
















