எம்மில் சிலருக்கு சில தருணங்களில் சிறுநீரை வெளியேற்றும் போது அதில் குருதியும் கலந்து வெளியேறலாம். இந்த அறிகுறி சிறுநீரகத்தில் நீர்க்கட்டி ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம் என்றும், இதற்கு உடனடியாகவும், முறையாகவும், சிகிச்சையை பெற்றால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீரக நீர்க்கட்டிகள் என்றால்.. சிறுநீரகங்களில் உருவாகும் திரவம் நிறைந்த வட்ட வடிவிலான பை என குறிப்பிடலாம். சிலருக்கு சிறிய அளவிலான சிறுநீரக நீர்க்கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் பெரும்பாலும் சிறுநீரக நீர்கட்டிகள்.. சிறுநீர் வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிலருக்கு சிறுநீரக நீர்கட்டிகள் பொலிசிஸ்டிக் சிறுநீரக பாதிப்புடன் ஏற்படலாம். வேறு சிலருக்கு சிறுநீரக நீர்கட்டிகள் சிக்கலானதாகவும், ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் உண்டாகும். இவை புற்றுநோயாக மாறக்கூடிய அபாயங்கள் இருப்பதால்… இதற்கு முறையான வைத்திய சிகிச்சை அவசியம்.
இடது பக்க விலா பகுதியில் வலி அல்லது முதுகு வலி, காய்ச்சல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, சிறுநீர் வெளியேற்றுவதில் அசௌகரியம் அல்லது குருதி கலந்த சிறுநீர் வெளியேறுதல்.. போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக சிறுநீரக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
இத்தகைய தருணங்களில் அல்ட்ரா சவுண்ட் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை வைத்தியர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்ப அடிப்படையில் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள். அதனைத் தொடர்ந்து சிறுநீரக நீர்க்கட்டிகளின் வளர்ச்சியை தொடர்ந்து வைத்தியர்களின் அறிவுரைப்படி பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் அவதானிக்க வேண்டும். வெகு சிலருக்கு மட்டும்தான் சத்திர சிகிச்சை அவசியமாகும். சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.