இவ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3.7 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹேரத் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே அதிக அளவில் உள்ளனர் எனவும், அவர்களில் பலர் மத நோக்கங்களுக்காக வருகிறார்கள் எனவும், திருகோணேஸ்வரம் கோயில் மற்றும் கதிர்காமம் போன்ற மதத் தலங்கள் அவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அது எங்களுக்கு ஒரு பெரிய பலம். உங்களுக்குத் தெரியும், நாங்கள் பொருளாதார நெருக்கடிக்குள்ளானோம். அந்த சூழ்நிலையிலிருந்து மீள, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதுவரை, 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், கடந்த ஆறு மாதங்களில் நாங்கள் 3.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளளோம்.
இவ் வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும், அந்த இலக்கை நோக்கி நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


















