விஜய் ரிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கும், நகைச்சுவை நடிகராக வண்ணத்திரை ரசிகர்களுக்கும், சமூக நல்லிணக்க செயல்பாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பிரபலமான கே பி வை பாலா கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ காந்தி கண்ணாடி’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படம் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகியுள்ள’ காந்தி கண்ணாடி ‘ எனும் திரைப்படத்தில் கே பி வை பாலா, பாலாஜி சக்திவேல், அமுதவாணன், நிகிலா சங்கர் , மதன், ஜீவா சுப்பிரமணியம், ஆராத்யா, மனோஜ் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தான் ஈட்டிய வருவாயை எல்லாம் சமூக நல திட்டங்களுக்காக செலவழித்து இணைய உலகிலும், மக்களிடத்திலும் நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் கே பி வை பாலா கதையின் நாயகனாக அறிமுகமாவதால் இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.















