செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது.தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சம்பவம் என்று கூறியுள்ளார். ராஜபக்ஷக்கள் தோல்வியடைந்திருந்த காலத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தேசிய பாதுகாப்பை பலமிழக்கச் செய்து இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
சுதந்திர காலத்தில் இருந்து 78 வருடங்களாக அரசியல் அதிகாரங்களுடனேயே அரசியல் நிறுவனங்கள் இருந்துள்ளன. சுயாதீனமாக இயங்கவில்லை. அரசியல் தலையீடுகளுடையே நடந்துள்ளன. இதுவே உண்மையாக காரணங்கள் இந்த விடயங்களுக்கு. இந்த அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உள்ளக விசாரணைகளின் நீதியை எதிர்பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரிப்பது எப்படி நியாயமாக அமையும்.
செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கமொன்றே குற்றவாளியாக இருக்கின்றது. இந்த அரசாங்கமும் யுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்க காலத்திலேயே செம்மணி புதைகுழிகள் உருவாகியுள்ளன. அங்கே முதல் அகழ்வின் போது 15 எலும்புகூடுகள் மீட்கப்பட்டன. ஆனால் அக்கால அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் குற்றவாளியின் வாக்குமூலத்தில் 500 முதல் 600 வரையிலான உடல்களை புதைப்பதற்கு தான் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றில் 15 எலும்புகூடுகளே மீட்கப்பட்டுள்ளன. அரசாங்கமே அதன் குற்றவாளி தரப்பாக இருக்கின்றது.
தற்போது அதற்கு அருகில் இன்னுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே குற்றமொன்று நடந்துள்ளது. அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இன்றி இதில் உண்மைகளை கண்டறிய முடியாது. இந்த அரசாங்கம் போருக்கு ஆதரவளித்துள்ளது.
குற்றமிழைத்த தரப்பே விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறு சுயாதீன விசாரணைகள் இடம்பெறும்.இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை கட்டமைப்பை கோருகிறோம். செம்மணி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றார்.