தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகச சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் மழையினால் மலைகளில் உள்ள தடுப்பு வாவியில் நீர் நிரம்பி வழிந்து நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததில் 124 பேரைக் காணவில்லை என தீயணைப்புத் திணைக்களம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் தாய்வானை தாக்கிய சூறாவளி தற்போது சீனாவின் தெற்கு கடற்கரையையும் ஆசிய நிதி மையமான ஹொங்கொங்கையும் தாக்கியுள்ளது.
கிழக்குப் பகுதியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவுகளால் உருவான தடுப்பு வாவி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அதன் கரைகளை உடைத்து குவாங்ஃபு நகருக்குள் வெள்ளம் நீர் வடிந்தோடியுள்ளது.
சுனாமி போன்று வெள்ளம் நீர் தாக்கியது என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவரும் குவாங்ஃபூவில் இருந்ததாகவும், அங்கு ஒரு ஆற்றின் குறுக்கே இருந்த ஒரு பெரிய சாலைப் பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டவுன்ஷிப்பில் சுமார் 1,000 பேர் வசிக்கும் தனது டாமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பலர் இன்னும் சிக்கித் தவிப்பதாகவும் வாங் சே-ஆன் தெரிவித்தார்.
















