திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கம், சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் வழங்கி அவருடன் உரையாடியிருந்தார்கள்.
இதன்பின்னர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தாங்கியிருந்த பதாதைகளை அவர்களிடத்தில் சென்று ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன் தனது அன்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பாதிக்கப்பட்ட மக்களினால் வழங்கி வைக்கப்பட்ட மகஜரில் பின்வரும் விடயங்களை குறிப்பிடப்பட்டு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் இயல்பு நிலையை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதோடு, உங்கள் அன்பான பரிசீலனைக்கு முக்கிய விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம் என குறிப்பிட்டு;
1. 1833 இல் பிரித்தானியரால் தமிழரின் தாயகம் (வடக்கு கிழக்கு) மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்ட போது, தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமை, தேசியத்தன்மை மற்றும் தாயக உரிமையை இழந்தனர். முதலாவது இலங்கை அரசு தொடங்கி இன்றுவரை ஆட்சிக்கு வந்துள்ள அனைத்து அரசுகளும் இந்த உரிமைகளை ஒடுக்கியுள்ளன. 1983 இல் “கருப்பு யூலை” கலவரங்களை பரிசீலித்த International Commission of Jurists (ICJ)> “இவை தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்புச் செயல்கள்” என அறிவித்தது. இத்தகைய தமிழர் அழிப்புத் திட்டங்கள் 2009 மே மாதத்தில் உச்சத்தை எட்டின.
2. 2009இற்குப் பிற்பகுதியில் இருந்து இன்று வரை, தமிழர்களிற்கெதிரான தொடரும் இன அழிப்பு (Constructive Genocide) எமது இருப்பை அழிக்கும் நிகழ்ச்சிநிரலில் இயங்குகிறது. அரசின் அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகள் தேசிய கொள்கைகளைத் திரித்துக் கொண்டு அவை தமிழர்களுக்கு எதிரானவையாகச் செயற்படுகின்றன. இது பன்னாட்டு சமூகத்தால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.
3. தமிழர்கள் மீது இடம்பெற்ற பன்னாட்டுக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் இந்நாட்டில் தொடங்கப்படவில்லையே தவிர, னைத் தாமதப்படுத்த உச்ச அளவிலான இராசதந்திரத்தை அரசு பயன்படுத்துகிறது. அதேவேளை, மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொடுமைப்படுததுதலையும், விசாரணைகளை மேற்கொள்வதையும் தொடர்வதுடன் அவர்களை எப்போதும் கண்காணிக்கப்படுபவர்களாக வைத்திருக்க அரசு முயல்கிறது.
4. OSLAP (OHCHR on Sri Lanka Accountability Project) உறுப்பினர்களுக்கே இலங்கைக்கு வருவதற்கு விசா மறுக்கப்படுகின்றது. இது நீதிக்கான அரசின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் துல்லியமான சான்றாக இருக்கின்றது.
5. தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான நிலங்களில், அரச ஆதரவுடன் காலனித்துவக் குடியேற்றம் (settler colonisation) தொடர்கின்றது. மிகச்சமீபத்திய உதாரணமாக மட்டக்களப்பின் மயிலாத்தமடு பகுதியில், தமிழர்கள் பண்டைய காலம் முதல் பயன்படுத்திவரும் மேய்ச்சல் நிலம், சிங்கள குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். நீதிமன்றம் அவர்களை அகற்ற உத்தரவு வழங்கினும், காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது. மாறாக, குடியேற்றக்காரர்கள் கட்டிடங்கள் அமைக்க, அரசாங்கம் கட்டுமான வசதிகளை வழங்குகின்றது. எனவும் மேலுள்ள அம்சங்களின் மூலம், ஐயா, நீங்கள் தரவுகளில் காணப்படும் விடயங்களுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உணரலாம்.
எனவே, நாங்கள் பணிவுடன், உங்கள் கனிவான கவனத்திற்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:
1. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
2. செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுமதிக்கவேண்டும்.
3. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு குற்றங்களுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐஊஊ) பரிந்துரை செய்யவேண்டும்.
4. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில் இடம்பெறும் நில பறிப்புகளை உடன் நிறுத்தி, உரிமையாளர்களுக்கு நிலங்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
6. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடி, அவர்கள் இன்னும் உயிருடன் உள்ளார்களா? என்ன நிகழ்ந்தது? என்பதற்கான பதில்களை உடன் வழங்க வேண்டும்.
7. 1948 முதல் தொடரும் வன்முறை மற்றும் தமிழர் இன அழிப்பின் முழுமையான அடித்தள அறிக்கையை OSLAP வெளியிட வேண்டுமென வலியுறுத்தவேண்டும்.
8. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய இலங்கை அரசை அழுத்த வேண்டுகிறோம்.
9.செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், SL அரசும் பன்னாட்டு அமைப்புகளும் இணைந்து செயல்படும் ஒரு கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க பரிந்துரை செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளையும் கிழக்க மாகாண பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் அமைப்புக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், மனித உரிமை செயற் பாட்டாளர்கள் இணைந்து வழங்கியிருந்தார்கள்.























