பேலியகொடை பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேலியகொடை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















