லாபகரமான நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘காந்தா ‘எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்’ காந்தா ‘ திரைப்படத்தில் துல்கர் சல்மான் , சமுத்திரக்கனி, பாக்கிய ஸ்ரீ போர்சே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டானி சான்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார். திரைப்பட நடிகரின் வாழ்வியலை விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் நாயகன் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களுக்காக ‘காந்தா’ படத்தின் கிளர்வோட்டத்தை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையேயான ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுத்தும் காட்சிகள் சுவராசியமாக இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் மாதம் பனிரெண்டாம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

















