ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் மொஹம்மத் நபி வீசிய முதலாவது பந்தை அவரது மகன் ஹசன் ஈசாக்ஹில் சிக்ஸாக விளாசி வரலாறு படைத்தார்.
காபுலில் நடைபெற்ற அமோ ஷாக்ஸ் அணிக்கும் மிஸ் அய்னாக் நைட்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற ரி20 போட்டியிலேயே தந்தையின் முதலாவது பந்தை ஈசாக்ஹில் சிக்ஸாக விளாசினார்.
அமோ ஷாக்ஸ் அணி சார்பாக ஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாடிய ஹசன் ஈசாக்இல், 23 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சகலதுறை வீரரான அவரது தந்தை மொஹம்மத் நபி தனது முதலாவது ஓவரை வீசினார்.
மொத்தமாக 308 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 281 விக்கெட்களைக் கைப்பற்றியவரும் 5,987 ஓட்டங்களைப் பெற்றுள்ளவருமான அனுபசவாலி மொஹம்மத் நபி தனது மகனுக்கு முதலாவது பந்தை ‘ரவுண்ட் த விக்கெட்’ முறையில் வீசினார்.
அந்தப் பந்தை மிகச் சரியாக கணித்த ஹசன் ஈசாக்ஹில் அதனை விளாசி அடித்து சிக்ஸாக்கினார்.
ஈசாக்ஹில் சிக்ஸ் அடித்ததும் நேர்முக வர்ணனையாளர்களில் ஒருவர்,
‘என்ன பழக்கவழக்கம் உனக்கு இருக்கிறது. உனது தந்தை அல்லவா உனக்கு பந்துவீசினார் மனிதா! மைதானத்துக்கு வெளியேதான் நீங்கள் எனது தந்தை. உங்கள் மீது எனக்கு அளவில்லா மரியாதை இருக்கிறது. ஆனால், நீங்கள் அந்த மாதிரி தளர்வாக பந்துவீசினால் நான் விளாசி அடிக்கத்தான் செய்வேன்’ என கற்பனையாக உரக்கக் கூறினார்.
அந்த ஓவரில் ஹசன் ஈசாக்ஹில் 12 ஓட்டங்களைப் பெற்றதுடன் அதன் பின்னர் மொம்மஹத் நபி அப் போட்டியில் பந்துவீசவில்லை.
வலதுகை துடுப்பாட்ட வீரரான ஈசாக்ஹில், 36 பந்துகளில் 2 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களை 144.44 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுன் பெற்றார்.
ஈசாக்ஹில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடி இருந்தார்.
இது இவ்வாறிருக்க, இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து மொஹம்மத் நபி ஓய்வுபெறுவதாக இருந்தார். அவர் தனது மகன் ஹசன் ஈசாக்ஹில் உடன் விளையாடுவதற்காக ஓய்வை பிற்போடக்கூடும் என கருதப்படுகிறது.
‘ஆப்கானிஸ்தானுக்காக எனது மகனுடன் விளையாடவேண்டும் என்பது எனது கனவாகும். எங்களால் ஒன்றாக விளையாடமுடியும் என நம்புகிறேன். அவர் சிறப்காக செயற்படுகிறார். அத்துடன் கடுமையாக உழைக்கிறார். நானும் அவருக்கு உந்துசக்தியாக இருக்கிறேன்’ என மொஹம்மத் நபி தெரிவித்துள்ளார்.


















