-முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை சவூதியில் ஆரம்பம்-
உக்ரைன் – ரஷியா போருக்கு தீர்வு கானும் வகையிலாக முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் – ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய ஜனாதிபதி புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் இதில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அங்கு வைத்து டிரம்ப்பை சந்தித்து ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் உக்ரைன் – ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. முன்னதாக மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, போரை நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்றும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் இருவர் மாஸ்கோவில் ரஷிய ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு மத்தியில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















