நான்கு முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டுக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஜூலை 8 ஆம் திகதியன்று கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கையின் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் ஏற்கனவே உள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முக்கிய அம்சமாக, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினரின் அண்மைய பிரான்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் அமைந்தது.
இவ்விஜயத்தின் போது, துறைமுக மேம்பாடு தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான பொது நிதி நிறுவனமான பிரான்ஸ் அபிவிருத்தி முகவரமைப்புடன் ( Agence Française de Développement (AFD) ) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, காலி, பேருவளை, புராணவெல்ல மற்றும் குடாவெல்ல ஆகிய நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்களின் மேம்பாட்டிற்கான பிரான்ஸ் அபிவிருத்தி முகவரமைப்புடன் சாத்தியமான ஆதரவு குறித்து ஆராயப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் பிரான்ஸ் தூதுவர் லம்பேர்ட் விரிவாகக் கலந்துரையாடினார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஒப்புதலுடன் இத்திட்டத்தை துரிதப்படுத்த முடியும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கடந்த 76 ஆண்டுகளாக முன்னைய ஆட்சியாளர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சிக்குப் பின்னர், தற்சமயம் நாட்டை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்து வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து அமைச்சர் சந்திரசேகர் பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கினார்.
2022 இல் வங்குரோத்து நிலையை அடைந்த நாடு தற்போது படிப்படியாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதிலுக்கு, பிரான்ஸ் தூதுவர் Lambert, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பிரான்ஸ் முழு ஆதரவை வழங்கியதை வலியுறுத்தினார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அவர் நினைவுபடுத்தியதுடன், இந்த மறுசீரமைப்பு முன்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதல் நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வள அமைச்சின் செயலாளர், கலாநிதி கொலித்த கமல் ஜினதாஸ, இலங்கையின் படகு கட்டும் துறையை மேம்படுத்துவதற்காக, பிரான்ஸில் உள்ள மேம்பட்ட மற்றும் நவீன படகு கட்டும் தொழில்நுட்பத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளுமாறு பிரான்ஸிடம் கோரினார். இக்கோரிக்கைக்கு பிரான்ஸ் தூதுவர் சாதகமான பதிலளித்தார்.
மேலும் இலங்கையின் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் கடல்வளங்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், நிலையான மீன்பிடியை ஊக்குவிப்பதற்கும் பிரான்ஸின் உதவி மற்றும் ஒத்துழைப்பை அமைச்சர் சந்திரசேகர் கோரினார்.
இச்சந்திப்பின் போது, உலக வர்த்தக அமைப்பினால் (WTO) உருவாக்கப்பட்ட மீன்பிடி மானியங்கள் தொடர்பான உடன்படிக்கையின் முதற்கட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம், சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி (IUU) மற்றும் அதிகப்படியான மீன்பிடி மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதன் மூலம் மீன்பிடித் துறையின் நிலைத்தன்மையை நோக்கமாகக் கொண்டது.
கடற்றொழில் அமைச்சரும், வர்த்தகம், வணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் இணைந்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இது குறித்து வெளிவிவகார அமைச்சகம் மூலம் WTO க்கு அறிவிக்கப்படவுள்ளது.