காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் அதிகம் அவதிப்படக்கூடும்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால், உணவுகள் பெரிதும் உதவி புரியும். குறிப்பாக முருங்கைக்கீரை அதிகம் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றுடன், கல்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவற்றால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும்.

இது தவிர முருங்கைக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கங்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது குடல் ஆரோக்கியம், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால், முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். மேலும் முருங்கைக்கீரையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு வலுப்பெறும். இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்கீரையுடன் எந்தப் பொருட்களை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
- மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த பொருள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கம் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும். அதுவும் முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் சேர்த்து சூப் தயாரித்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
- இஞ்சி

ஆயுர்வேதத்தின் படி, இஞ்சியில் என்டி – ஒக்ஸிடன்ட்டு மற்றும் என்டி – மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த இஞ்சியை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். அதற்கு இஞ்சி முருங்கை டீயை தயாரித்து குடிக்கலாம். இந்த டீயைத் தயாரிக்க கொதிக்கும் நீரில், சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு, அத்துடன் முருங்கைக்கீரையையும் சிறிது சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து சிறப்பாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதற்கு சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்துடன் முருங்கையை சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இதை செய்ய சிறிது முருங்கை கீரை அல்லது பொடியை மிக்சர் ஜார் அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஆரஞ்சு ஜூஸ், வாழைப்பழம், ஆளி அல்லது சியா விதைகளை சேர்த்து நன்கு அரைத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்தால், ஸ்மூத்தி தயார்.
- பூண்டு

பூண்டில் என்டி – வைரல் மற்றும் என்டி – பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இப்படிப்பட்ட பூண்டு பற்களை முருங்கைக்கீரையுடன் சேர்த்து எடுக்கும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். அதற்கு முருங்கைக்கீரையைக் கொண்டு பூண்டு பற்களை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இப்படி அடிக்கடி பூண்டு சேர்த்த முருங்கைக்கீரை பொரியலை உட்கொள்ளும்போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இந்த பாதாமை பொடி செய்து, முருங்கைக்கீரை பொரியலுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, உடலுக்கு வேண்டிய என்டி-ஒக்ஸிடன்ட்டுகள் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமும், சக்தியும் மேம்படும்.


















