-ஆப்கானிஸ்தானின் தாக்குதலில் 55 பாகிஸ்தான் படையினர் பலி
-பதிலுக்கு ஆப்கானின் முக்கிய நகர்களை தாக்கியது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் தாலிபான் அரசு ஆளும் ஆப்கானிஸ்தான் இடையே நேரடிப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த 6 ஆம் திகதி இஸ்லாமாபாத் ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
எனவே பதிலடியாக இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் பெண்கள் குழந்தைகள் உட்பட 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராணுவ முகாம்கள் உட்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 55 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான பல முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாகவும் பாக்கிஸ்தான் படையினர் பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ள பாகிஸ்தான், போரை வெளிப்படையாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், கந்தஹார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.
காபூலில் குறைந்தது மூன்று இடங்களலும், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையில் முழு அளவிலான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் என்று கூறிய பாகிஸ்தான், தங்கள் இராணுவ முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாக கூறப்படும் தகவலை நிராகரித்தது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், ‘எங்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உள்ளது. இப்பொது வெளிப்படையாக போர் தொடங்கிவிட்டது’ என்று தெரிவித்தார்.


















