-கனடாவில் நடந்த பயங்கர சம்பவம்-
கனடாவில் பாடசாலைக்குள் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள மேல் நிலைப் பாடசாலையில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பாசடாலைக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பாடசாலையில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாடசாலைக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 10 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. 25 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். புhடசாலைக்குள் இருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்துகிடந்தார். அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த நபர் குறித்த விவரங்களை பொலிஸார் வெளியிட வில்லை.
இருப்பினும் இத்தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று, தாக்குதலில் மற்றொரு நபரும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு பின் அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

















