-உலகளவில் வலுக்கும் சந்தேகம்-
-நகைச்சுவையாக கூட அப்படி கூற முடியாது : ரஷ்யா-
உலக அளவில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ள எப்ஸ்டின் இரகசிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் ரஷ்ய உயர் அதிகாரிகளுடன் எப்ஸ்டின் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியிருக்கின்றன.
வெளியாகியுள்ள 35 இலட்சம் பக்கங்கள் கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் விளாடிமிர் புட்டின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது. ரஷ்யா குறித்த குறிப்புகள் 5,000க்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்றன.
எப்ஸ்டின் பலமுறை புட்டினைச் சந்திக்க முயற்சி செய்துள்ளதும், அதற்காக ஐரோப்பிய அரசியல்வாதிகளின் உதவியை நாடியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இருவரும் நேரில் சந்தித்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
ஐ.நா-வுக்கான முன்னாள் ரஷ;ய தூதுவர் விடாலி சுர்கினுடன் எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சுர்கினின் மகனுக்கு நியூயோர்க்கில் வேலை வாங்கித் தரவும் அவர் முன்வந்துள்ளார்.
2018ஆம் ஆண்டு மின்னஞ்சல் ஒன்றில் ‘சுர்கின் ஒரு சிறந்த நபர், எங்களுக்கிடையிலான உரையாடலுக்குப் பின்னர் அவர் ட்ரம்ப் பற்றி நன்கு புரிந்து கொண்டார்’ என எப்ஸ்டின் குறிப்பிட்டுள்ளார். எப்ஸ்டின் ரஷ;யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இளம்பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததும்,
அவர்களை உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விபரீத பாலியல் ஊழல் வழக்கில் ரஷ;ய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எப்ஸ்டின் ரஷ்யாவின் ‘உளவாளியாக’ செயல்பட்டாரா என்பது தொடர்பில் போலந்து அரசு விரிவான விசாரணை நடத்தும்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரெம்ளின் மாளிகை ஊடகத் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், எப்ஸ்டின் ரஷ்ய உளவுத்துறையின் சொத்து என்ற வாதத்தை நகைச்சுவையாகக் கூட எடுத்துக்கொள்ள முடியாது. இது நேரத்தை வீணடிக்கும் செயல் என விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டின், இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2019 இல் கைது செய்யப்பட்டார். விசாரணை நிலுவையில் இருந்தபோதே நியூயோர்க் சிறையில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது நட்பு வட்டத்தில் உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் வர்த்தகர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

















