தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.
இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 9ஆம் திகதி இரவு, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் வெளியேறின.
கிராமங்களுக்குள் சுற்றித் திரிந்த அவை நேற்று காலை மீண்டும் வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன. அப்போது, வெள்ளியங்கிரி அருகே உள்ள முள்ளங்காடு பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் இருந்த மின்வேலி அவற்றை வழி மறித்தது.
இதனால், அந்த மின்வேலியை தாண்டிச் செல்ல முடியாமல் யானைகள் சிறிது நேரம் தவித்தன.
அப்போது சமயோசிதமாக யோசித்த ஒரு பெண் யானை, மின்வேலியின் கம்பிக்கு அடியில் புகுந்து வெளியேற, உடன் வந்த குட்டியும் வெளியேறியது.
மற்றொரு யானையால் அந்த வழியாக வெளியேற முடியாததால், மின்வேலியின் கம்பியை தாண்டியபடி வெளியேறியது.
இந்த காட்சியை, அப்பகுதியில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.