இன்றைய திகதியில் அலுவலகத்தில் பணியாற்றும் பலரும் தங்களது வாழ்க்கை நடைமுறையையும் , பசியாறுதலில் சுவைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உணவு முறையையும் முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இளம் வயதிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்தத் தருணத்தில் ஆண்களுக்கு மட்டுமே இயங்கும் உயிரணு சுரப்பியான புரோஸ்டேட் எனும் சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆண்களின் உடலில் சிறுநீர்ப்பை இடம் பிடித்திருக்கும் பகுதிக்கு கீழ் ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாக திகழும் புரோஸ்டேட் எனும் சுரப்பி அமையப்பெற்றுள்ளது. இது உயிரணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய சுரப்பியாகும்.
பொதுவாக முதுமையான வயதில் உள்ளவர்களுக்கு மட்டுமே முழுமையான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக இப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும் இப்பகுதியில் உருவாகும் புற்றுநோய் மெதுவாகவே வளர்ச்சி அடைந்து பாதிப்பை உண்டாக்கும். அதனால் இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீரில் குருதி கலந்து வெளியேறுதல், முதுகு வலி, இணையுடன் உடலுறவில் முழுமையாக ஈடுபட இயலாத நிலை , அதீத சோர்வு , எடை இழப்பு , கால்கள் மற்றும் தோள் பகுதி பலவீனமாக உணர்தல் …போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
இத்தகைய தருணங்களில் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வைத்திய நிபுணர்கள் ஸ்கேன் பரிசோதனையுடன் திசு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு தற்போது மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் கண்டறியப்பட்டிருக்கும் றொபாடீக் ரேடிக்கல் புரோஸ்டேடெக்டமி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என தெரிவித்துள்ளனர்.