தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமாக ‘இட்லி கடை’ கடந்த புதன்கிழமை அன்று ரிலீஸானது. தனுஷுடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார்.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவக் காதல் என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயரச் சம்பவம் மற்றும் அது சார்ந்த அரசியல் சர்ச்சைகளால் இந்த படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
முதல் நாளில் இந்தியளவில் சுமார் 11 கோடி ரூபாவும், இரண்டாம் நாளில் சுமார் 10 கோடி ரூபாவும் வசூலித்த இந்தப் படம் மூன்றாம் நாளான நேற்று 40 சதவீத சரிவை சந்தித்து 6 கோடி ரூபா அளவிலேயே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு எழுந்த கலவையான விமர்சனங்களும், காந்தாரா 1 படத்துக்குக் கிடைத்து வரும் அபரிமிதமான ஆதரவும் இந்தப் படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.














