-காசா மீது மீண்டும் கொடுரத் தாக்குதல் ஆரம்பம்
-ஒரே நாளில் மட்டும் 45 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
-டெல் அவிவ் விரைகிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்மை சர்வதேச நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10 ஆம் திகதி முதல் அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இதனால் காசாவை விட்டு வெளியேறி இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததால் அவர்களிடையே மகிழ்ச்சியும் திரும்பி உள்ளது. இந்நிலையில் காசாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் திடீரென தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் அங்கே குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அத்துடன் தரைவழி தாக்குதலும் நடந்தது.
இத்தாக்குதலில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. அதேநேரம் இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்து உள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பின், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனனர். இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் மோதி வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணித்து இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் டெல் அவிவ் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடந்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.


















