முட்டையில் புரதம், விற்றமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு என சத்துக்கள் அதிகம் உள்ளன. முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவில் எது ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்பதைப் பார்க்கலாம்.
முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த மஞ்சள் பாகத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
பச்சை மஞ்சள் கருவில் லுடீன், ஜியாக்சாண்டின், கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆனால், இதில் கலோரிகள் அதிகம். எடை அதிகரிக்க விரும்புபவர்கள் மஞ்சள் கருவை சாப்பிடலாம். இது முடி மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
முட்டையின் வெள்ளைக்கருவை விட முட்டையின் மஞ்சள் கருவில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. இதில் விற்றமின் B6, B12, A, D, E மற்றும் K ஆகியன காணப்படுகின்றன.
இதில் கல்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் செலினியம் போன்றவையும் நிறைந்துள்ளன. மஞ்சள் கருவிலுள்ள கரோட்டினாய்டுகள் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இது உடலின் இருதய செயற்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் பெரும்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது கொழுப்பு இல்லாதது மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது என்பதால் ஆரோக்கிய விரும்பிகள், எடையைக் குறைக்க விரும்புவோர் உண்ணலாம்.
தசைகளை உருவாக்குவதற்கும் எடை அதிகரிப்பதற்கும் உதவும் திறனுக்காக அறியப்படுகின்றது.
இதில் பொட்டாசியம் மினரல் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பராமரிக்கவும் உதவும். ரைபோஃப்ளேவின் விற்றமின் கண்புரை மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தடுக்க உதவுகின்றது.
உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கின்றது. இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது. தசைகள் வலுவாக இருக்க முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடுவது நல்லது.
ஒரு முழு முட்டையின் 93% இரும்புச்சத்து மஞ்சள் கருவில் உள்ளது மற்றும் 07% வெள்ளைக் கருவில் உள்ளது. 90 சதவீத கல்சியம் மஞ்சள் கருவில் உள்ளது.
முட்டையின் இரண்டு பகுதிகளும் ஆரோக்கியமாக இருந்தாலும், ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது மஞ்சள் கரு மிகவும் பயனுள்ளது.
நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரோல் இருப்பதால், அவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும். எனவே, அடுத்த தடவை முட்டைகளை உண்ணும்போது அவற்றை நிராகரிப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்.
ஏனெனில், மதிப்புமிக்க ஊட்டச்சத்துகளை தூக்கி எறிந்து விடுவீர்கள். முழு முட்டைகளையும் சாப்பிடுவதன் மூலம் மாத்திரமே அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெற முடியும்.


















