-17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் பிரதமராகும் தாரிக் ரஹ்மான்-
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பின் நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
வங்கதேசத்தின் 13 ஆவது பாரர்ளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (வயது 60) தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பி.என்.பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பின் பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பி.என்.பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டி நிலவியது.
300 தொகுதிகளைக் கொண்ட வங்கதேச பாராளுமன்றத்தில், வேட்பாளர் ஒருவரின் மறைவு காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 212 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று பி.என்.பி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் பிரதமராக பதவியேற்ற உள்ளார்.


















