இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 30 சதவீத வரியின் தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், அமெரிக்காவுடன் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுப்பட உள்ளது. இருப்பினும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியுடன் அமெரிக்கா விதித்த 30 சதவீத வரி நடைமுறைக்கு வரவுள்ளதுடன், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு இந்த வரி விதிப்பு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், இந்த வரிகளை எளிதாக்குவது குறித்த மற்றொரு முக்கிய பேச்சுவார்த்தையை மெய்நிகர் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளது. நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்பி அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற உள்ளனர். ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிக்குள் இந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு தூதுவர் ஜேமிசன் கிரியர் ஆகியோருக்கு இடையில் பரஸ்பர வரி குறைப்பு குறித்தும், நெருக்கடியை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் உயர் மட்ட மெய்நிகர் கலந்துரையாடலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாக இலங்கை ஏற்றுமதிகளுக்கான முன்மொழியப்பட்ட 30 வீத வர்த்தக வரியை மேலும் குறைப்பதும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் ஆகும்.
நிதி அமைச்சின் செயலாளர், கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இந்த தொடர்ச்சியான ஈடுபாடுகள், இரு நாடுகளும் வர்த்தக முரண்பாடுகளை பரஸ்பரம் நன்மை அளிக்கும் தீர்வை காண்பதில் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவின் 30 சதவீத வரி விதிக்கும் முடிவு, ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் 44 சதவீதமாக அறிவிக்கப்பட்டு பின்னர் குறைக்கப்பட்டது. இது பல்வேறு வர்த்தக பங்காளிகளுடன் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு பரந்த கொள்கையின் ஒரு பகுதியாகும். 2024 ஆண்டில் இலங்கையின் மொத்த வணிக ஏற்றுமதியில் 23 சதவீதத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை தனது மிகப்பெரிய ஒற்றை ஏற்றுமதி இலக்காகக் கொண்ட இலங்கைக்கு, இந்த வரி ஆடை, இரப்பர் மற்றும் தேங்காய் போன்ற முக்கிய துறைகளில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
நெருங்கி வரும் காலக்கெடு இருந்தபோதிலும், அரசாங்கம் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியாக உள்ளது. வரி விகிதத்தில் மேலும் குறைப்புகளைப் பெறுவது அல்லது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வளர்க்கும் விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்கின்றது. இந்த தொடர்ச்சியான உரையாடல், மாறிவரும் உலக வர்த்தக போக்கை கையாள்வதற்கும், முக்கியமான அமெரிக்க சந்தையில்; ஏற்றுமதியின் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கும் இலங்கையின் முன்கூட்டிய அணுகுமுறையாகவே தற்போதைய முயற்சிகள் குறிக்கிறது.


















