நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை (11) வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.
விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், விபத்து தடுப்பு தொடர்பான மத்திய நிலையத்தின் வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு, ஜூலை மாதம் வரும் முதலாம் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தேசிய விபத்து தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அந்தவகையில் 10வது முறையாக இத்திட்டம், இம்மாதம் 7 முதல் 11 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாரத்தை செயல்படுத்த தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், விபத்துக்களை சந்திக்க வாய்ப்புள்ள இடங்களையும், நமது அன்றாட வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவிடும் இடங்களையும் கருத்தில் கொண்டு ஐந்து நாள் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகளவான நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக விபத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான விபத்துகள் நிகழ்வதுடன், இதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான விபத்துகள் எமது கவனயீனம் காரணமாகவே நிகழ்கிறது.
ஆகையால் அவை தொடர்பில் அவதானம் செலுத்தும் பட்சத்தில் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம். இலங்கையில் 15 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறான விபத்துகளால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
வருடாந்தம் நாட்டில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் 8 சதவீதமானோர் அதாவது 10 ஆயிரம் – 12 ஆயிரம் பேர் விபத்துக்களால் மரணிப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாதாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துச் சம்பவங்கள் பதிவாவதுடன் அண்ணளவாக 30 பேர் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக 7 500 – 8000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழக்கின்றனர். அத்தோடு ஆண்டுதோரும் 3 ஆயிரம் உயிர்மாய்ப்பு சம்பவங்களும் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.