-நேட்டோ நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்படும் விரிசல்-
வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு ஜனாதிபதியை சிறைப் பிடித்து சென்றது. மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்கு கிரீன்லாந்து, டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெனிசுலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை ட்ரம்ப் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:- இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவில், கடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கடற்படை தளம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சாகோஸ் தீவை, மொரீசியஸிடம் ஒப்படைக்கும் பிரிட்டனின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இந்த முடிவு சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் சாதகமானதாக இருக்கும் என்றார்.
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் தனது பிடியை வலுப்படுத்த அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, ஆர்க்டிக் பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நேட்டோ கூட்டணி நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக கூடுதல் போர் தளவாடங்களையும், சிறப்புப்படைப் பிரிவினரையும் டென்மார்க் கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு, ஐரோப்பிய நாடுகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் அராணுவ நகர்வுகள் அதிகரித்துள்ளதால், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

















