வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.
வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அமெரிக்க இராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வான்வழித் தாக்குதல் நடத்தினர். கராகஸில் உள்ள முக்கிய இராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல இராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.
இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமுலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.


















