நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘முதல் பக்கம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளை மழையே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை இசை கலைஞரும், நடிகருமான ஹிப் ஹொப் ஆதி தமிழா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பட குழுவினருக்கும், இசை குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ முதல் பக்கம்’ எனும் திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா , அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ வெள்ளை மழையே’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்காக பிரத்யேகமாக படமாக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியில் பாடலை பாடிய பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் தன்னுடைய வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களை கவர்கிறார். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.














