-சீனாவிடம் உதவி கேட்கிறார் ட்ரம்ப்-
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியிருக்கும் நிலையில், இந்த தடையை நீக்க சீனா உதவும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் 90வீத எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில், அதற்கான காரணங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சீனா, ஈரானின் எண்ணெய் தயாரிப்புகளில் சுமார் 90 சதவீதத்தை கொள்வனவு செய்கிறது.
ஆனால், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும். வொஷpங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், சீனாவின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 40 வீதம் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















