இலங்கையின் முன்னாள் றக்பி வீரர் மற்றும் முன்னாள் சர்வதேச மத்தியஸ்தர் டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான ஏ கோல் இன்டர்நேஷனல் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள அணிக்கு எழுவர் சி றக்பி திருவிழா சீ.ஆர். அண்ட் எவ்.சி. மைதானத்தில் இம் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.
றக்பி விளையாட்டில் பிரசித்த பெற்ற 16 ஆண்கள் பாடசாலைகளினதும் அவற்றின் சகோதர பெண்கள் பாடசாலைகளினதும் பழைய மாணவர்களைக் கொண்ட 16 அணிகள் இந்த றக்பி திருவிழாவில் பங்குபற்றவுள்ளன.
ஆண்கள் மற்றும் பெண்கள் சகோதர பாடசாலைகளின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் ஒரே ஒரு விளையாட்டுப் போட்டி தொடர் இதுவாகும். பாடசாலை நாட்களின் பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டுப் பார்க்கவும் நட்புறவுகளை வளர்த்துக்கொள்ளவும் சி றக்பி எனும் றக்பி திருவிழா வழிவகுக்கிறது. அத்துடன் பழைய மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஆடிப்பாடி கொண்டாடும் ஒரு முழு நாள் நிகழ்வாகவும் சி றக்பி விளங்குகிறது.
றக்பி திருவிழாவுடன் டி ஜே கலைஞர்களின் இசை விருந்து இடம்பெறுவதுடன் பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதற்கு இடம் ஒன்றும் மைதானத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் இருபாலாரையும் கொண்ட 16 அணிகள் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் நடத்தப்படும்.
முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் 8 அணிகள் கிண்ணம் மற்றும் கோப்பை பிரிவுகளில் விளையாட தகுதிபெறும். கடைசி இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குவளைக்காக போட்டியிடும்.
ஒவ்வொரு அணியிலும் 2 பெண்களும், 20க்கும் 25க்கும் இடைப்பட்ட 2 வீரர்களும், 30 வயதுக்கு மேற்பட்ட 3 வீரர்களுமாக 7 பேர் விளையாடும் அணியில் (Playing seven) இடம்பெறுவர்.
இவர்களுக்கு பொறுத்தமான மாற்று வீராங்கனைகள், வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறுவர்.
இந்த சுற்றுப் போட்டியில் கிண்ணம், கோப்பை, குவளை ஆகிய பிரிவுளில் சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு கிண்ணங்களுடன் பணப்பரிசுகள் வழங்கப்படும். இதனைவிட சிறந்த வீரர், சிறந்த விராங்கனை தெரிவுசெய்யப்பட்டு விருதுகளுடன் பணப்பரிசு வழங்கப்படும்.
கடைசியாக 2023இல் நடைபெற்ற சி றக்பி திருவிழாவில் கிண்ணப் பிரிவில் வித்யார்த்த – புஷ்பதான அணியும் கோப்பை பிரிவில் வெஸ்லி – மெதடிஸ்ட் அணியும் குவலைப் பிரிவில் புனித பேதுருவானவர் – திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் அணியும் சம்பியனாகின.
இந்த வருட சி றக்பி திருவிழாவுக்கு எலிபன்ட் ஹவுஸ் – லெமனேட், கீல்ஸ் கிரெஸ்ட், இமோரிச், ஹேலியொன் – ஐயோடெக்ஸ், ஃபெயார்வே ஹோல்டிங்ஸ், ஃப்றிமி, பிரிமா, ரஷ், சீ.ஆர். அண்ட் எவ்.சி. ஆகியன அனுசரணை வழங்குகிகன்றன.
பங்குபற்றும் அணிகள்
ஏ குழு: வெஸ்லி – மெதடிஸ்ட், தர்மராஜ – மகாமாய, புனித சில்வெஸ்டர் – புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலை, கிங்ஸ்வூட் – மகளிர் உயர்தர பாடசாலை.
பி குழு: தேர்ஸ்டன் – தேவி பாலிகா, திரித்துவம் – ஹில்வூட், புனித சூசையப்பர் – புனித பிறிஜெட், றோயல் – விசாக்கா.
சி குழு: விஞ்ஞானம் – கல்கிஸ்ஸை மகளிர் உயர்தர பாடசாலை, இஸிபத்தன – புனித போல் மிலாகிரிய, டி.எஸ். சேனாநாயக்க – சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் பாடசாலை, புனித ஆசீர்வாதப்பர் – நல்லாயன் கன்னியர் மடம் பாடசாலை.
டி குழு: வித்யார்த்த – புஷ்பதான, புனித பேதுருவானவர் – திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை, ஆனந்த – மியூசியஸ், கல்கிஸ்ஸை பரி. தோமையார் – பிஷப் கல்லூரி.


















