மேஷம்
விரும்பிய வாழ்க்கையை அடைய போராடும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தன காரகன் ஆட்சி பெற்று ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்வதும் திறம்பட செயல்படும் பாக்கியத்தை பெறுவீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராகுவுடன் இணைவு பெறுவதால் புதிய தொழில் வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து ஏழாமிடத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் குரு பார்ப்பது உங்களுக்கு குரு இருக்குமிடத்தை விட பார்க்குமிடம் சிறப்பு. நவாம்சத்தில் தனாதிபதியுடன் குரு இணைவு பெற்று ராசிநாதனின் பார்வை பெறுவது எடுத்த காரியத்தில் வெற்றியையும், நினைத்ததை நினைத்தபடி செய்யும் வலிமையும் பெறுவீர்கள். பஞ்சாமாதிபதியுடன் குரு இணைவு பெறுவதும் உங்களின் கடந்த கால தொய்வு நிலையை மாற்றி வளம் பெறுவீர்கள்.
இம்மாதம் 06-07-2025 வரை குருவின் அஸ்தங்கம் முடிந்து உதயமானதும் உங்களுக்கு சரியான வாழ்க்கைத்துணை அமையும். தொழில் இல்லாதவருக்கு தொழில் வாய்ப்பும் அமையப் பெறுவீர்கள். குறுகிய கால பலன்களை பெறுவீர்கள். சுமையாக இருந்த பல பணிகள் வெகு எளிதாக முடித்துக்கொள்வீர்கள். சோதனைகளிலிருந்து விடுபடுவீர்கள். எண்ணிய எண்ணம் ஈடேறும். பொருளாதார நிலையில் தன்னிறைவு உண்டாகும். கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
06-07-2025 ஞாயிறு மாலை 05.26 முதல் 09-07-2025 புதன் அதிகாலை 04.32 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மர், சுப்ரமணியரை வழிபாடு செய்து நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியை தரும்.
ரிஷபம்
சரியான பாதையை தெரிவுசெய்து அதன் வழியில் பயணிக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவு இடங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால் எதிலும் வெற்றியை தரும். எல்லாவித காரியமும் அனுகூலமாக அமையும். கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். குறைபாடுகளை நீக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.
உங்களின் ராசிநாதன் ஆட்சி பெற்றிருப்பது உங்களின் செயலில் துரித தன்மையும், எடுத்த காரியத்தை முடிக்கும் திறமையும் உண்டாகும். சுகஸ்தானாதிபதி தனஸ்தானத்தில் அமர்வதால் வாகனங்களை புதுப்பித்துக்கொள்வதும் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக நண்பர்களின் உதவி கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியை குரு பார்க்க தொழிலில் வளர்ச்சி பெற்று நல்ல வளம் கிடைக்கும்.
அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் ஈடுபாடுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்த பல குழப்பங்களுக்கு விடிவுக்காலம் பெற்று, வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களின் செயற்பாடுகளில் துணிச்சலாக முடிவுகளை எடுப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வியில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். தன்னை மதிப்பவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். எதையாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். பழைய நண்பரின் சந்திப்பு உங்களுக்கும் மகிழ்ச்சி தரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
09-07-2025 புதன் அதிகாலை 04.33 முதல் 11-07-2025 வெள்ளி பகல் 01.32 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமேற்றி புளி சாதம், அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கிவிட்டு வர உங்களின் உடல்நலனும் தொழிலும் சிறப்பாக அமையும்.
மிதுனம்
உறுதியான மனநிலை கொண்டு எதையும் செயல்படுத்தும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதன் அமர்வதும் ராசியில் குரு அமர்ந்து பார்க்கும் இடங்களும் சிறப்பான பலன்களை பெற்று தரும். உங்களின் ஆலோசனைகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
ராசியில் குருவுடன் சூரியன் இணைவு பெறும் போது மனவலிமையும் எதையும் துணிச்சலுடன் செயல்படும் வைராக்கியமும் கிடைக்கும். உன்னதமானவர்களே உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் பல குழப்பங்கள் தீரும். வெட்டியாகப் பேசி திரியும் அன்பர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். ஒன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் உண்டாகும். எதை செய்தாலும் சற்று யோசித்து செயற்படுவீர்கள். நல்ல விடயங்களை தள்ளிப் போடாமல் உடனே செயற்படுத்துவீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதன் புதன் அமர்ந்து பொருளாதாரத்தில் ஓரளவு நன்மையை பெற்றுத் தருவார்.
பாக்கியஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவது குரு பார்வை பெறுவது சிறப்பான நற்பலன்கள் உண்டாகும். நல்ல தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்த அடிப்படையில் வாய்ப்பு அமையும். அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். லாபாதிபதி செவ்வாயுடன் தனாதிபதி சந்திரன் இணைவு பெற்று பாக்கியஸ்தானத்தை பார்ப்பது பல தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்படும் திறன் உண்டாகும். பொறுப்புடன் செயல்பட்டு காரியத்தை சீராக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையின்றி சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு ஆலோசனையை கேட்டு செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
11-07-2025 வெள்ளி பகல் 01.33 முதல் 13-07-2025 ஞாயிறு இரவு 08.05 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு கொண்டைகடலை மாலையும், மஞ்சள் நிற துணியும் அணிந்து நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள, உங்களின் சகல காரியமும் மேன்மையை தரும்.
கடகம்
காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் செயல்படும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து யோகாதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருப்பதும் லாப ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமைவதும் நற்பலன்களை பெற்று தரும். கிடைக்க இருப்பது கிடைப்பதும் உங்களுக்கு வாய்ப்பாக அமையும்.
அட்டம ஸ்தானத்தின் ராகுவுடன் சனியும் இணைவு பெற்றிருப்பது பல காரிய தடைகளை தந்தாலும் குரு பார்வையில் தடைப்பட்ட காரியம் சீராக நடக்க தொடங்கும். இம்மாதம் 6ஆம் திகதிக்கு பின்பு உங்களுக்கு வளர்ச்சியை பெற்று தருவார்கள். இதுவரை கொடுக்கல் – வாங்கலிலும். பொருளாதார நிலையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு அதிலிருந்து மீண்டு வர வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் பிரச்சினை சீராகும். அதற்கான பணிகள் செயற்பட தொடங்கும். வீரையாதிபதி புதன் ராசியில் அமர்ந்து உங்களின் செலவீனங்களை குறைத்து நன்மையை தருவார்.
அரசியலிலும், பொது வாழ்விலும் நீங்கள் நிலையான அந்தஸ்தை பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும். அதன் மூலம் உங்களின் வளர்ச்சியை உருவாக்கிக்கொள்வீர்கள். சொந்தங்கள் பிரிந்து சென்றாலும் கூட அதற்கான பின் விளைவுகளால் அனைவரும் வந்து சேருவார்கள். அதனை நினைத்து செயற்பாடுகளை குறைத்து கொள்ளாமல் எப்பொழுதும் போல செயல்பட துவங்கும் போது தானே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். கலைத்துறையினரும் புதிய பல ஒப்பந்தங்களுக்கு வாய்ப்புகள் அமையும். குறுகிய காலத்தில் வளர்ச்சியை பெறுவீர்கள். விளையாட்டு சாதனைகளை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், பலவர்ணம்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
13-07-2025 ஞாயிறு இரவு 08.06 மணி முதல் 15-07-2025 செவ்வாய் இரவு 12.30 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு எலுமிச்சை பழம் சாதம் வைத்து மூன்று நெய் தீபம் ஏற்றி மனமுருக வேண்டிக்கொள்ள சகல தடைகளும் நீங்கி நன்மை பெறுவீர்கள்.
சிம்மம்
விருப்பமான செயலை செயல்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் குருவும் இணைவு பெறுவதும் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று அமர்வதும் உங்களின் தொழிலில் எதிர்பாராத சில தனவரவு கிடைக்க பெறுவீர்கள். எதை கொடுத்தாலும் அதில் வளர்ச்சியை பெற்று மேன்மை அடைய செய்வீர்கள். குல தெய்வ வழிபாடுகள் மூலம் உங்களின் நீண்ட கால பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள்.
விரையாதிபதியுடன் யோகாதிபதி இணைவு பெற்று சனி ராகுவை பார்ப்பதும் சனி ராகுவை குரு பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். ஒன்லைன் வர்த்தகம் சிறப்பான நல்ல வளர்ச்சியை பெற்றுத் தரும். பல நாட்கள் வராமல் இருந்த நிலுவைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறுதியுடன் செயல்பட்டு பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். தீய நண்பர்களின் சேர்க்கையை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து காரிய தடைகளை நீக்கி வளம் பெறுவீர்கள்.
அரசியலிலும் பொது வாழ்விலும் மீண்டும் சாதிக்கும் உன்னத நிலையை பெறுவீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு என்று மரியாதையும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். திடமான நம்பிக்கையுடன் காரியங்களை செய்து மேன்மை அடைவீர்கள். தொந்தரவுகளை செய்து வந்தவர்கள் உங்களை விட்டு விலகிவிடுவார்கள். எதை செய்தாலும் அதில் நியாயமும், அர்த்தமும் இருக்கும்படி செயல்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு தொழில் பலம் உண்டாகும். பல இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளை செய்து வந்த உங்களுக்கு ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
15-07-2025 செவ்வாய் இரவு 12.31 முதல் 18-07-2025 வெள்ளி அதிகாலை 03.27 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு தேங்காயில் நல்லெண்ணெய் ஊற்றி செவ்வரளி பூ மாலையிட்டு புளி சாதம் வைத்து வேண்டுதலை சொல்லிவர சகல காரியங்களும் வெற்றியை தரும்.
கன்னி
வாழ்க்கை வாழ்வதற்கே என உணர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்தும் தொழில் ஸ்தானத்தில் குருவுடன் சூரியன் அமர்ந்து இருப்பது உங்களின் தொழிலில் வளம் பெற்று விளங்குவீர்கள். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் மூன்றாமிடத்தை பார்வையிடுவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
இம்மாதம் உங்களின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுதந்திரமான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சாதிக்க வேண்டுமென்ற அடிப்படையில் அமைத்துக்கொள்வீர்கள். சுமையாக இருக்க நினைக்க மாட்டீர்கள். புதிய கோணத்தில் அனைத்தையும் பார்ப்பீர்கள். குறைகளை களைந்து நிறைவை அடைவீர்கள். உங்களின் நுணுக்கமான செயல் பெரும்பலமாக அமையும். அரசியலிலும் தனித்துவமாக செயல்படுவது அவசியமாகும். உங்களை சார்ந்தவர்களை வளர்த்துவிட எண்ணுவீர்கள்.
இம்மாதம் உங்களுக்கு குறுகிய செலவுகள் உண்டாகும். வீடு மராமத்து பார்த்தல், வெளியூர் சென்று வருதல் போன்ற வகையில் செலவீனம் வரும்.
கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி ஞானம் சிறப்பாக அமையும். உங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள் உங்களின் அன்பைப் பெற தேடி வரும் காலமாக அமையும். புதிய முயற்சிகளை சில காலம் தள்ளிப்போடுவது நல்லது. நீங்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது நல்லதாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
18-07-2025 வெள்ளி அதிகாலை 03.28 முதல் 20-07-2025 ஞாயிறு அதிகாலை 05.47 வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், செவ்வாய்க்கிழமை சுப்ரமணியர் வழிபாடு செய்வதும் சிறப்பு. உங்களின் அன்புக்குரியவர்களின் எண்ணமும் உங்களின் எண்ணமும் இணைந்து சகல காரியமும் சித்தியாகும்.
துலாம்
எடுத்த காரியத்தை முடிக்கும் வரை தொடர்ந்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்வதும் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்காமல் நீங்களே களத்தில் இறங்கி வேலை செய்ய தொடங்குவீர்கள். புனித யாத்திரை சென்று வருவீர்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் சனியுடன் ராகுவும் இணைவு பெறுவதும் குரு பார்வை அவர்களுக்கு கிடைப்பதும் குல தெய்வ வழிபாடு செய்தல், புனித யாத்திரைக்கு சென்று வருதல், புனித நீராடல் போன்ற சூழ்நிலைகள் உருவாகும். தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்பு அமையும். தந்தை இல்லாதவர்கள் அவரை நினைத்து தர்ம காரியம் செய்ய வேண்டிவரும். அரசியலிலும் பொது வாழ்விலும் ஈடுபாடு கொள்ள சந்தர்ப்பம் உண்டாகும். தொழிலில் போட்டிகள் இன்றி சிறப்பாக வளம் பெறுவீர்கள். உதவிகள் செய்ய நல்ல நண்பர்களின் சேர்க்கை உதவியாக அமையும்.
உங்களின் ராசிக்கு இரண்டாமிடத்து தனாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனுடன் லாபஸ்தானத்தில் இணைவு பெறுவதும் ராசிநாதனின் நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்து அம்சத்தில் ராசியில் அமர்வது கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்த காரியத்தை எளிதில் நடத்தி காட்டுவீர்கள். பாதுகாப்பான உங்களின் செயல்பாடுகள் உங்களை ஊக்கப்படுத்தும் கணவன் – மனைவி இருவரும் அன்னியோன்யமான உறவுகள் பலப்படும். கேள்விஞானம் கிடைக்க பெறுவீர்கள். எதையும் அறிந்துகொள்ள அதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் கொள்வீர்கள். உங்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
20-07-2025 ஞாயிறு அதிகாலை 05.48 முதல் 22-07-2025 செவ்வாய் 08.28 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாத்தி மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள உங்களின் அனைத்து பிரச்சினைகளும் விலகி சுபீட்சம் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விடாமுயற்சியாக செயற்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையுடன் சுக்கிரன் பார்வை பெறுவது மிகவும் சிறப்பான பலன்கள் உருவாகும். சனி ராகு சுகஸ்தானத்தில் இணைவு பெற்று உடல் உபாதைகளை தந்து வந்த நிலை மாறி குரு பார்வையால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். திறமையான உங்களின் செயல்பாடுகள் மூலம் எத்தனை சோதனை வந்தாலும் அத்தனையும் தூளாக்கி வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம்.
தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் அமர்ந்து பலம் பெறுவதால் உங்களின் தொழில் தொய்வின்றி இயங்கும். ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது பலம் பெறச் செய்யும். களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதால் கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். எதிர்கால பலன் கருதி நீங்கள் எடுக்கும் காரியம் நன்மையை தரும். ஒன்லைன் வர்த்தகத்தில் சற்று யோசித்து செயல்படுதல் நல்லது. நினைத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.
உங்களின் யோகாதிபதி சந்திரன் பலம் பெற்று அமர்வதும் கேதுவுடன் சம்மந்தம் பெறுவதும் தொட்ட காரியம் துலங்கும். உதவிகள் தானே வந்து அமையும். சிலருக்கு சொந்தமாக தொழில் துவங்கும் வாய்ப்புகள் அமையும். எதையும் அவசர நிலையில் செயல்படுத்தாமல் சற்று நிதானமாக செயல்படுவதன் மூலம் உங்களின் வெற்றி உறுதியாகும். தனாதிபதி குரு அட்டமஸ்தானத்தில் அமர்வதால் முதலீடுகளில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் ஆசையான வார்த்தை பேசுவதை நம்பாமல் உங்களின் உறுதியை நம்பி செயல்படுவது நல்லது. பொது வாழ்வில் உங்களுக்கு உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். சொந்த உறவுகளின் மூலம் சிலருக்கு தொல்லை வரலாம். எச்சரிக்கை அவசியம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
22-07-2025 செவ்வாய் காலை 08.27 முதல் 24-07-2025 வியாழன் பகல் 12.21 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில், பைரவருக்கும் நவகிரகங்களுக்கும் நல்லெண்ணெய் தீபமேற்றி புளி சாதம் செய்து பக்தர்களுக்கு தானம் செய்து மனமுருக வேண்டிக்கொள்ள வெற்றியை பெற்று தரும்.
தனுசு
பொறுப்புடன் எதையும் செய்து வெற்றியை காணும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பார்வை பெறுவதும் மன வலிமைக்கும், மூன்றில் சனி ராகு அமர்ந்து குரு பார்வை பெறுவது உங்களின் வளர்ச்சிக்கும் வழி கிடைக்கும். எதை செய்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் சீராக ஆராய்ந்து செயல்படுவீர்கள். குற்றங்களையும் குறைகளையும் களைந்து அதிலிருந்து விடுபட்டு செயல்பட தொடங்குவீர்கள்.
இனி உங்களின் ஆறாமிட அதிபதி உங்களின் விரையஸ்தானத்தை பார்ப்பதால் இதுவரை இருந்த இழப்புகள் மறைந்து, நன்மை உண்டாகும். உங்களின் யோகாதிபதி சூரியன் ராசியை ராசிநாதனுடன் இணைந்து பார்ப்பதால் நல்ல வரன் அமைவதும் சிறந்த தொழில் வாய்ப்பும், வெளிநாட்டு வேலை, துரிதமான செயல்பாடுகள் உண்டாகும். தான் படித்த கல்விக்கு தகுந்த வேலையை தேடாமல் கிடைத்த வேலைக்கு சென்று வருமானத்தை பெருக்கிக்கொள்வீர்கள். ஒன்லைன் வர்த்தகம் இம்மாதம் தள்ளிவைப்பது நல்லது. இதன் மூலம் இழப்பு வராமல் தடுக்க முடியும்.
அரசியலிலும், பொது வாழ்விலும் செயல்பட தொடங்குவீர்கள். முக்கிய நிகழ்வுகளை பற்றி யோசிக்காமல் உங்களின் குறிகோளை அடையும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். யோகாதிபதி வீட்டில் சந்திரனுடன் செவ்வாய் அமர்வதுடன் கேதும் இணைவு பெறுவதால் சூரியன் என்ன செய்வரோ அதனை கேதுவும் செய்வார். இனி எல்லாம் சிறப்பான நற்பலன்கள் தரும்.
கலைத்துறை அன்பர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். தனக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெறுவீர்கள். சொந்த உறவுகளின் பிரிவினை மறந்து நன்மை பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகள் மறையும். திடமான நம்பிக்கையே உங்களை வெற்றி பெறச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
24-07-2025 வியாழன் பகல் 12.20 முதல் 26-07-2025 சனி மாலை 06.13 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி மிளகு கலந்த சாதம் படைத்து அதனை பக்தர்களுக்கு தானம் செய்து வேண்டிக்கொள்ள சகல நலனும் உண்டாகும்.
மகரம்
புத்துணர்ச்சியும் புதுப்பொலிவுடனும் விளங்கும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து குரு பார்வையிடுவது சிறப்பான பலனை பெற்றுத் தரும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களுக்கு ஏதாவது ரூபத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறப்பான வளமாக வாழ்க்கை சூழ்நிலை அமையும்.
உங்களின் யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பது உங்களுக்கு இம்மாதம் நல்ல பலனை பெற்றுத் தரும். குறிப்பாக கலைத்துறையினரும் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். நேரத்தை வீணடிக்காமல் சிறந்த நற்பலன்களை பிறருக்கு செய்வதை தொண்டாக கருதி அவர்களுக்கு உதவி செய்வீர்கள். காரணமில்லாத காரியங்களை செய்யமாட்டீர்கள். சமுதாய வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு சிறப்பாக அமையும். வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் போல் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்துவீர்கள்.
விரைய ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் தொழில் இதுவரை பட்ட எண்ணற்ற கஷ்டங்கள் விலகி, நன்மை பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளை செய்வீர்கள். சிலர் திருமண வைபவங்களில் கலந்துகொண்டு சிறப்பித்து வருவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக கருதி செயல்படுவீர்கள். சகோதரரின் வழியில் சில காரியம் நடக்கும். கொடுத்த சில இடங்களில் வராமல் இருந்த பணம் சிறிது சிறிதாக வரபெறுவீர்கள். பொது வாழ்வில் உங்களுக்கு தனிபட்ட மரியாதையும், பாராட்டுதலும் கிடைக்கும். பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிலை உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-07-2025 சனி மாலை 06.14 மணி முதல் 28-07-2025 திங்கள் இரவு 02.29 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து துளசி மாலையும், நெய் தீபமும் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் உங்களின் அனைத்து வித பிரச்சினைகளும் தீரும்.
கும்பம்
சாதிக்க நினைத்ததை அடையும் வரை விடாத கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் அருளும் குரு பார்வையும் பெறுவது மிக சிறப்பான பலன் உண்டாகும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவது நீங்கள் செய்யும் தொழிலில் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். எதை செய்தால் சரியான வழி என்று ஒரு குறிக்கோளுடன் சென்று அதனை அடைவீர்கள். உங்களை மதிப்பவரை நீங்கள் மதித்து நடப்பீர்கள்.
ராசியில் ராகு ராசிநாதனுடன் இணைவதால் எதை செய்தாலும் பிரம்மாண்டமாக செய்வதும், உறுதியுடன் செயற்படுவதும் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த விடயங்கள் சிறப்பாக நடக்கும். குரு பஞ்சம ஸ்தானத்தில் சூரியனுடன் அமர்வது நீங்கள் பித்ருக்களின் ஆசியையும் அவர்களுக்கு செய்யும் கடமையையும் தவறாமல் செய்வீர்கள். அவர்கள் நினைவாக தான தர்மம் செய்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகள் பலப்பட்டு வெற்றியை அடைவீர்கள்.
களத்திர ஸ்தானத்தில் சந்திரனுடன் கேது செவ்வாய் இணைவு பெற்று ராசியை பார்ப்பதால் உங்களின் கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நண்பர்கள் வந்து உதவுவார்கள். சிலருக்கு திருமண வாய்ப்பு கைகூடும். காதல் பற்றி சிந்தனை வெளிப்படும். பல நாட்கள் காதலை சொல்ல தயங்கியவருக்கு தைரியமாக காதலை சொல்லக்கூடிய சூழ்நிலை அமையும்.
கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் பெறுவதுடன் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். எந்த செயல் செய்தாலும் அதில் சிறு தடை உண்டாகும். அதை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, திங்கள். வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
01-07-2025 செவ்வாய் மாலை 06.58 முதல் 04-07-2025 வெள்ளி அதிகாலை 05.41 மணி வரையும்.
28-07-2025 திங்கள் இரவு 02.30 முதல் 31-07-2025 வியாழன் பகல் 01.05 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் கௌமாரியம்மன் கோவில் சென்று விளக்கெண்ணெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து எலுமிச்சை சாதம் வைத்து வேண்டிக்கொண்டு பக்தர்களுக்கு தானம் செய்து வர சகலமும் வெற்றியைத் தரும்.
மீனம்
தனக்கான செயல்களில் தானே முன் நின்று செய்யும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அட்டம ஸ்தானத்தையும் விரைய ஸ்தானத்தையும் பார்ப்பதால் கெடுபலன் குறையும். தொழில் ஸ்தானத்தை சூரியனுடன் பார்ப்பது தொழில் விருத்தியை செய்ய வங்கி மூலம் கடன் பெற்று வளப்படுத்திக்கொள்வீர்கள். உறவுகளை நீங்கள் விரும்பினாலும் அவர்கள் உங்களிடம் வேண்டாத உறவுகளாக தற்காலிகமாக இருப்பார்கள். கண்டுகொள்ளாமல் இருந்தால் பிற்காலத்தில் சரியாகும்.
செவ்வாயுடன் கேது ஆறாமிடத்தில் இணைவு பெறுவது எதிர்ப்புகளை விரட்டும் வலிமையும், எதிரிகளை எப்படி அணுகுவது என்ற யுக்தியையும் கையாள்வீர்கள். பணபலம் படைத்தவர்கள் கூட உங்களிடம் வளம் பெற்று திகழ்வார்கள். குறைவின்றி எதிலும் வெற்றியை காண்பீர்கள். மத்திம வயதில் இருக்கும் அன்பர்களுக்கு இது பொங்கு சனி காலம் என்பதால் சனி கடும் வேலை வாங்கினாலும் அதற்குரிய வளர்ச்சியை பெற்றுத் தருவதுடன் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் பெற செய்வார். இப்படி பட்ட காலத்தில் சிறுதொகையை தான தர்மம் செய்துகொள்வது மிக சிறப்பான நற்பலன்களை தரும்.
உங்களின் முயற்சி வெற்றி பெற சுக்கிரன் ஆட்சி பெற்று அமைவதால் உங்களின் எண்ணங்களை செயல்படுத்த ஊக்கபடுத்தி வேண்டியதை கிடைக்க உதவி செய்வார். உடல்நலனின் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்ப ஒற்றுமையும் செய்தொழில் மேன்மையும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் கொண்டு செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்கள் உங்களின் அன்பை தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டீர்கள். இனி உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். எதையும் செயல்படுத்தும்போது சமயோசிதமாக செயல்படுவீர்கள். தைரியமே உங்களின் மூலதனமாக அமைந்து செயல்படும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், செவ்வாய், புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
04-07-2025 வெள்ளி அதிகாலை 05.52 முதல் 06-07-2025 ஞாயிறு மாலை 05.25 மணி வரை.
31-07-2025 வியாழன் பகல் 01.06 முதல் 02-08-2025 சனி இரவு 12.46 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை தோறும் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு அரளிப் பூ மாலை போட்டு வணங்கி வர அனைத்து பிரச்சினைகளும் தீரும்.