சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் ஐசிசியின் புதிய விதி இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் புதன்கிழமை (02) ஆரம்பாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகவுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க,
‘இந்த விதி எங்களுக்கு புதியது. எனவே அது குறித்து நாங்கள் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து நன்கு சிந்தித்து தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை இந்த விதி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே 34 ஓவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட இரண்டு பந்துகளில் எந்த பந்தை 35ஆவது ஓவரிலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் நன்கு ஆராய்ந்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். இது எங்களுக்கு புதிய விடயமாகும். ஆனால், முதலில் இருந்து சரியான தீர்மானத்தை எடுக்க எண்ணியுள்ளோம்’ என்றார்.
இதேவேளை, பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கைக்கு சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
‘ஒரு வருடத்திற்கு முன்னர் பங்களாதேஷில் பங்களாதேஷுக்கு எதிராக விளையாடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாங்கள் 1 – 2 என தோல்வி அடைந்தோம். எனவே இந்தத் தொடர் எங்களுக்கு சவாலாக இருக்கும். மேலும் தரவரிசைகள் முக்கியமல்ல. எந்த அணியுடன் விளையாடினாலும் நெருக்கடி ஏற்படுவது இயல்பு. எவ்வாறாயினும் திறமையாக விளையாடி வெற்றிபெற்று தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் பிரவேசித்து அங்கிருந்து மேலும் முன்னேற முயற்சிப்போம்’ எனவும் அவர் கூறினார்.
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் கலவை எவ்வாறு அமையும் என அவரிடம் கேட்டபோது,
‘பெரும்பாலும் 6 துடுப்பாட்ட வீரர்கள், ஒரு சகலதுறை வீரர், 4 பந்துவீச்சாளர்களைக் கொண்டதாக இறுதி அணி அமையும். ஆனால். சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரரையா அல்லது வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரையா இணைப்பது என்பது குறித்து நாங்கள் போட்டிக்கு முன்னர் தீர்மானிப்போம். பெரும்பாலும் மிலான் ரத்நாயக்கவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது’ என பதிலளித்தார்.
எவ்வாறாயினும் அண்மைக் காலங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்களுக்கே இந்தப் போட்டியில் விளையாடக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆர். பிரேமதாச அரங்க ஆடுகளம் குறித்து கேட்டதற்கு,
‘ஆர். பிரேமதாச அரங்கு ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு பயன்தரக்கூடியதாகும். ஆனால், துடுப்பாட்டத்துக்கு பொருத்தமான ஆடுகளத்தையே நான் விரும்புகிறேன். ஆனால், ஆடுகளம் எவ்வாறான தன்மையைக் கொண்டிருக்கும் என்பதை நாளை காணக்கூடியதாக இருக்கும்’ என சரித் அசலன்க பதிலளித்தார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் கடைசிக் கட்டத்தில் போட்டியை சாதகமாக முடித்து வைக்கக்கூடியவர் என வருணிக்கப்படும் தங்களுடன் சிறந்த ஜோடியாக இணையக்கூடியவர் என கூற முடியுமா என அவரிடம் கேட்கப்பட்டதற்கு,
‘ஜனித் லியனகேவும் துனித் வெல்லாலகேவும் போட்டிகளை சிறப்பாக முடித்துவைக்கக்கூடிய ஆற்றல் உடையவர்கள்’ என்றார்.
இலங்கை அணி
பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
பெத்தும் நிஸ்ஸன்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க, ஜனித் லியனகே ஆகியோரே துடுப்பாட்ட வீரர்களாக அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சு சகலதுறை வீரராக மிலான் ரத்நாயக்க அல்லது துனித் வெல்லாலகே இடம்பெறுவார்.
சுழல்பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக அசித்த பெர்னாண்டோவுடன் டில்ஷான் மதுஷன்க அல்லது ஏஷான் மாலிங்கவும் இடம்பெறுவர்.
ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே பந்துவீச்சாளர்கள் தீர்மானிக்கப்படுவர்.