விஜய் தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கொமடி நடிகர் கே பி வை பாலா. இவர் சமூக சேவையில் பெரு விருப்பம் கொண்டிருப்பதால் தொடர்ந்து சமூக சேவையை செய்து.. சமூக ஊடக வலைத்தளங்களில் நாயகனாக சித்தரிக்கப்படும் இவர் ‘காந்தி கண்ணாடி’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகும் ‘காந்தி கண்ணாடி’ எனும் திரைப்படத்தில் கே பி வை பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைக்கிறார்கள். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஆதிமூலம் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய் கிரண் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எளிய மக்களின் வாழ்க்கைக்கும், மனதிற்கும் நெருக்கமான விடயங்களை மையப்படுத்தி படம் இயக்க விரும்பினேன். இப்படத்தின் மூலம் கே பி வை பாலாவை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் கதையின் நாயகனாக நடிப்பது அதிகரித்து வருகிறது. சந்தானம், யோகி பாபு, சூரி, ரோபோ சங்கர், சாம்ஸ் பால சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது கொமடி நடிகரான கே பி வை பாலாவும் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
இதற்காக படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளியில் கே பி வை பாலா நாயகனானது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற எதிர்மறையான விமர்சனத்தை இடம்பெறவைத்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.