உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கைதுசெய்யப்பட்டபோது, அவரை கொழும்பிலிருந்து சாய்ந்தமருது நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்ற சட்டத்தரணி தற்போது இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கிறார். எனவே, அனைத்தையும் சுரேஷ் சலே மீது சுமத்தக்கூடாது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தை முழுமையாக புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் மீது சுமத்த முயற்சிக்கப்படுகின்றது. ஆனால் குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் 2017இல் முன்னாள் அமைச்சர் விஜேதாச, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இந்த சபையில் தெரிவித்திருந்தார். ஆனால், அன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் 2019 ஏப்ரல் 21 இடம்பெற்றது. ஆனால் இவ்வாறான குண்டுத்தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறப்போவதாக ஏப்ரல் 10ஆம் திகதி பிரபுக்கள் மெய் பாதுகாவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டிருந்தது.
அந்தக் காலத்தில் நான் ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தேன். எனது மெய்ப் பாதுகாப்பு பிரதானிக்கும் அந்த தகவல் வந்தது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சஹ்ரான் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார்.
அவரை கொழும்பிலிருந்து சாய்ந்தமருது நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சட்டத்தரணி இந்த பாராளுமன்றத்தில் இருக்கிறார். அதனால் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் தொடர்புபட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கையில், இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் எவ்வாறு சலே மீது சுமத்த முடியும்? மேலும், தற்போது குற்றப்புலனாய்வு துறையில் இருக்கும் ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகிய இருவரும் அந்த அரசாங்கத்தில் பொலிஸ் கடமையில் இருந்தவர்கள்.
அவர்கள்தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துவந்தார்கள். எனவே இதுதொடர்பில் தெரிவிப்பதாக இருந்தால் இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன’’ என்றார்.
















